கறம்பக்குடி பகுதியில் தொழிற்கூடம் இன்றி தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் மழை காலங்களில் கடும் பாதிப்பு


கறம்பக்குடி பகுதியில் தொழிற்கூடம் இன்றி தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் மழை காலங்களில் கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2019 10:45 PM GMT (Updated: 21 Sep 2019 7:19 PM GMT)

கறம்பக்குடி பகுதியில் தொழிற்கூடம் இல்லாததால் மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். மழைகாலங்களில் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர், நரங்கியப்பட்டு ஆகிய ஊர்களில் மண்பாண்டங்கள் மற்றும் மண் சிற்பங்கள் செய்யும் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மண்பாண்டங்கள் செய்வதையே குலத்தொழிலாகவும் செய்து வருகின்றனர்.

நாகரீகத்தின் வளர்ச்சியில் பாதிக்கப்பட்ட பல தொழில்களில் மண்பாண்ட தொழிலும் ஒன்று. பிளாஸ்டிக், எவர் சில்வர் பாத்திரங்களின் வருகைக்கு பின்னர் மண்பாண்டங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. தொழில் நலிவு, சமூக அந்தஸ்து இன்மை போன்ற காரணங்களால் இன்றைய இளைய தலைமுறையின் மண்பாண்ட தொழிலில் ஆர்வம் காட்டுவது இல்லை. இருப்பினும் பழமை மாறாமல், குடும்ப வழக்கப்படியும், சிலர் இத்தொழிலை விடாமல் செய்து வருகின்றனர்.

மண்பாண்டங்கள் பயன்பாடு அதிகரிப்பு

தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாடு சார்ந்த தொழில்களில் ஒன்றாக மண்பாண்ட தொழில்கள் இருப்பதாலும், மண்பாண்டங்களின் மருத்துவ குணங்கள் குறித்து விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், நகர வாசிகளும் தற்போது மண்பானைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பொங்கல், திருவிழா போன்ற விசே‌‌ஷ தினங்களுக்கு மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கறம்பக்குடி பகுதியில் தயாரிக்கப்படும் மண் பாண்டங்கள், தமிழக அளவில் பிரசித்தி பெற்றவை. கலை நயத்துடன் அப்பகுதியில் உருவாக்கப்படும் மண்பானைகள், சட்டிகள், தண்ணீர் தொட்டிகள், அடுப்புகள் போன்றவை காண்போரை கவர்ந்திருக்கும் சக்தி கொண்டவை. இங்கு தயாரிக்கும் மண்சிற்பங்கள் வெளிநாடுகளில் அலங்கார பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன.

இச்சிறப்பு மிக்க இத்தொழில் கறம்பக்குடி பகுதியில் நலிவடைய தொடங்கி உள்ளது. குளங்களில் மண் எடுப்பதில் ஆரம்பித்து, அதற்கு வடிவம் கொடுப்பது, காய வைப்பது, சுடுவது, சந்தைபடுத்துவது என பல நிலைகளிலும் தொழிலாளர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

தொழிற் கூடம் அமைக்க வேண்டும்

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-

மண்பாண்டங்களை செய்வதற்கு தேவையான மண்ணை குளங்களில் எடுப்பதற்கு வருவாய் துறையினர் கடும் கெடுபிடி காட்டுகின்றனர். நரங்கியப்பட்டு, மழையூர் ஆகிய இரு ஊர்களிலும் தொழிற் கூடம் இல்லை. இதனால் மழை காலங்களில் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடுமையாக உழைத்து செய்த மண்பாண்டங்களை பாதுகாக்க முடியாமல் மழையில் வீணாகி விடுகின்றன. எனவே இப்பகுதியில் தொழிற்கூடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டும் எந்த உதவியும் எங்கள் பகுதிக்கு கிடைக்கவில்லை. தொழில் நலிவடையாமல் காக்க அரசு உதவி அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் கலாசாரத்தின் மண் சிற்பங்களாய் மண்ணுக்கு உருவம் கொடுக்கும் கலைஞர்களாய் திகழும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை உண்டோம், உறங்கினோம் என்ற அன்றாடம் காய்ச்சி பிழைப்பாய் போய்விட்டது. மெல்ல மெல்ல நலிந்து வரும் இத்தொழிலில் ஈடுபடுவோர் மீது அரசு நேசக்கரம் நீட்ட வேண்டும். தனது கலைத்திறனால் வியப்பு குறியாக உள்ள மண்பாண்ட கலைஞர்களின் வாழ்க்கை கேள்விகுறியாக மாறாமல் காப்பது அரசின் கடமை.

Next Story