புகளூர் காவிரியாற்று பகுதியில் கதவணை அமைக்கப்படும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு


புகளூர் காவிரியாற்று பகுதியில் கதவணை அமைக்கப்படும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 21 Sep 2019 10:30 PM GMT (Updated: 21 Sep 2019 7:38 PM GMT)

கரூர் மாவட்டம் புகளூர் காவிரியாற்றின் குறுக்கே ரூ.490 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைப்பது குறித்து 110 விதியின் கீழ் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நொய்யல்,

கரூர் மாவட்டம் புகளூர் காவிரியாற்றின் குறுக்கே ரூ.490 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைப்பது குறித்து 110 விதியின் கீழ் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டின் இறுதியில் கதவணையை எந்த இடத்தில் அமைப்பது? என்பது குறித்து அதிகாரிகள் பார்வையிட்டு இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதனை தொடர்ந்து அங்கு மண் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் சென்னை பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, தலைமை பொறியாளர் (திட்டம் உருவாக்கம்) பொன்ராசு, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்வம், செயற்பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் புகளூர் காவிரியாற்று பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் கதவணை எந்த வடிவமைப்பில் உருவாக்குவது, அதன் நீளம்-அகலம், ரூ.490 கோடியில் கதவணை பணிகள் முடிந்து விடுமா? என்பன உள்ளிட்ட கோணங்களில் விரிவான ஆய்வினை மேற்கொண்டனர். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்து, பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கும். கதவணை அமைக்கப்பட்டால் புகளூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் போதிய தண்ணீர் கிடைக்கும். மேலும் ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். இந்த திட்டத்தால் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளும் பயன்பெறும் என அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.


Next Story