கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீச வேண்டாம் - பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள்


கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீச வேண்டாம் - பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Sep 2019 10:45 PM GMT (Updated: 21 Sep 2019 8:06 PM GMT)

கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீச வேண்டாம் என்று கடலோர தூய்மை தின நிகழ்ச்சியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பனைக்குளம்,

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு மண்டபம் அருகே உள்ள சீனியப்பா தர்கா கடற்கரையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சி மையம் சார்பாக கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் தூய்மை பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:- கடலோர குப்பைகளில் திடக்கழிவு கடலில் உள்ள உயிரினங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த கூடியது. பிளாஸ்டிக் பொருட் களை யாரும் கடல் மற்றும் கடற்கரையோரங்களில் வீச வேண்டாம். கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கடலில் உள்ள பல உயிரினங்கள் பாதிக்கப்பட்டு இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

மாணவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட எந்தவொரு பொருட்களையும் பயன்படுத்த மாட்டோம் என உறதிமொழி எடுத்து கொள்ளவேண்டும் .இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் ஆனந்த், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய முதுநிலை விஞ்ஞானி தமிழ்மணி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம், விஞ்ஞானிகள் கண்ணன், ரவிக்குமார், நதீராபானு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்துறை மாணவர்கள், செய்யதுஅம்மாள்,செய்யதுஹமிதியா, தாசிம்பீவி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர். சீனியப்பாதர்கா கடற்கரை பகுதி முழுவதும் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன.

இதே போல் உச்சிப்புளியில் உள்ள அரியமான் கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையின் சார்பில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. தூய்மை பணியை மண்டபம் இந்திய கடலோர காவல் படைநிலைய கமாண்டன்ட் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்களும் மற்றும் கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டு கடற்கரையில் கிடந்த அனைத்து குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் கமாண்டன்ட் மணிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் நிகழ்ச்சியை நடத்தினர்.தூய்மை பணியை சாமிநாதன் ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி வேல்விழி தொடங்கி வைத்தார்.

அக்னிதீர்த்த கடற்கரையில் இருந்து சங்கமால், ஓலைக்குடா வரையிலான கடற்கரை பகுதியில் கிடந்த குப்பைகளை பள்ளி மாணவர்களும், நகராட்சி துப்புரவு பணியார்கள் மற்றும் யாத்திரை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டு சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் கடற்படை நிலைய கமாண்டன்ட் ஏ.கே.தாஸ், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜான்சன், தங்கச்சிமடம் கிராம வள மைய பொறுப்பாளர் கெவிக்குமார், சலாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story