கருங்கல் அருகே கேரள ஆம்னி பஸ் கல் வீசி உடைப்பு 6 பேர் கைது


கருங்கல் அருகே கேரள ஆம்னி பஸ் கல் வீசி உடைப்பு 6 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2019 11:00 PM GMT (Updated: 21 Sep 2019 10:27 PM GMT)

கருங்கல் அருகே கேரள ஆம்னி பஸ்சை கல் வீசி உடைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருங்கல்,

கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள், வேன்கள் குமரி மாவட்டத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால், குமரி மாவட்டத்தில் உள்ள ஆம்னி பஸ், வேன் டிரைவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறி வருகிறார்கள். இதுதொடர்பாக குமரி, கேரள டிரைவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நேற்று காலையில் கருங்கல் சுண்டவிளை பகுதியில் பயணிகளை ஏற்றுவதற்காக கேரள ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை வீயன்னூரை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 30) ஓட்டி சென்றார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து பஸ்சை வழி மறித்து நிறுத்தினர்.

கல் வீசி உடைப்பு

அத்துடன் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் கண்ணாடி உடைந்து விழுந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து டிரைவர் சுந்தர்ராஜ் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பஸ் மீது கல்வீசி உடைத்ததாக கிள்ளியூரை சேர்ந்த சஜின், குளச்சலை சேர்ந்த ராஜகுமார், சீலன், வித்யாமணி, ஆன்டனி, இலவுவிளையை சேர்ந்த அஸ்வின் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story