முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது


முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2019 3:45 AM IST (Updated: 22 Sept 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே நல்லாடை கொத்தங்குடி நெல்லடித்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் பிரவீன்குமார் (வயது 23). திருவிளையாட்டம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சிவக்குமார் (38). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். திருவிளையாட்டம் செல்வம் மகன் பாரதி.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாரதியின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. அந்த மோட்டார் சைக்கிளை பிரவீன்குமார், சிவக்குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து திருடி சென்றதாக பாரதி சந்தேகப்பட்டுள்ளார். இதனால் பாரதிக்கும், பிரவீன்குமார் தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நல்லாடை பனங்குடி மெயின்ரோட்டில் பிரவீன்குமார், சிவக்குமார் ஆகியோர் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த பாரதி மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து, முன்விரோதம் காரணமாக பிரவீன்குமார், சிவக்குமார் ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கைது

இதுகுறித்து பிரவீன்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார், பாரதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வழக்கு தொடர்பாக மேமாத்தூர் வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த முரளி மகன் சக்திவேல் (23), அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் அசுபதி (28), மேமாத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத் (30), நெடுங்காடு வடமட்டம் கீழசெம்பியன் சாலைத்தெருவை சேர்ந்த மதியழகன் மகன் சரவணன் (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக பாரதி, மதன், விஜய் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story