கம்பம் பகுதியில், சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் தொழிலாளர்கள்
கம்பம் பகுதியில், சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் தொழிலாளர்கள் பயணம் செய்கிறார்கள். அந்த வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் முன்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கம்பம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளாக காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. நெல், திராட்சை, வாழை, காய்கறிகள் போன்றவற்றை இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வாறு சாகுபடியாகும் காய்கறிகள், வாழை, திராட்சை போன்றவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சாகுபடியாகும் பொருட்களை கொண்டு செல்வதற்காகவே கம்பம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அவற்றை விளைபொருட்களை கொண்டு செல்ல மட்டும் பயன்படுத்தாமல், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஆட்களை ஏற்றிச்செல்லவும் பயன்படுத்துகின்றனர்.
அத்துடன் கேரள மாநிலத்துக்கு தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் இந்த வாகனங்களிலேயே சென்று வருகின்றனர். பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் கட்டணத்தைவிட சரக்கு வாகனங்களில் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதால் பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் இந்த வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வாகனங் களில் ஆட்கள் பாதுகாப்பாக அமர்ந்து செல்வதற்கு இருக்கைகள் கிடையாது.
வாகனங்களின் பின்புறம் சரக்குகளை அடுக்கி வைப்பதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் நின்றபடி ஆபத்தான முறையில் தான் பயணம் செய்ய வேண்டும். கூடுதல் வருமானத்துக்கு ஆசைப்பட்டு சரக்கு வாகன ஓட்டுனர்கள் அதிக ஆட்களை ஏற்றிச்செல்வதால் சில இடங்களில் அந்த வாகனங்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் கம்பம் பகுதியில் ஏற்படாமல் தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story