வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எதிரொலி: காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எதிரொலியாக காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
காட்பாடி,
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும். மேலும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 4 ரெயில்களில் குண்டு வைக்கப்படும். இதனை மெத்தனமாக எடுத்து கொள்ள வேண்டாம். குண்டுவெடிப்பில் 100-க்கும் மேற்பட்ட உயிர்சேதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து கோட்ட மேலாளர் சுப்பாராவ், காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் காட்பாடி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் போலீசார், பயணிகளிடம் ரெயில் நிலையம் அல்லது ரெயில் பெட்டியில் மர்மபொருள் ஏதாவது கிடந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காட்பாடி ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். அதன்பின்னரே பயணிகள் ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக யாராவது சுற்றி திரிகிறார்களா? என்று கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story