நங்கநல்லூரில் தொழில் அதிபர் வீட்டில் 130 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை; வடமாநில கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படை


நங்கநல்லூரில் தொழில் அதிபர் வீட்டில் 130 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை; வடமாநில கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படை
x
தினத்தந்தி 21 Sep 2019 11:30 PM GMT (Updated: 21 Sep 2019 10:19 PM GMT)

நங்கநல்லூரில், தொழில் அதிபர் வீட்டில் 130 பவுன் தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளையர்களை 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). தொழில் அதிபரான இவர், கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். இவர், சபரிமலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

ரமேசின் மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகை, 10 பவுன் வைர நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.இதுபற்றி தகவல் அறிந்ததும் தென் சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 வடமாநில வாலிபர்கள் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிவதும், பின்னர் ரமேஷ் வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதிப்பதும், கொள்ளையடித்த நகைகளை பையில் போட்டு மீண்டும் வெளியே வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளை வைத்து வடமாநில கொள்ளையர்களை பிடிக்க பரங்கிமலை உதவி கமிஷனர் சங்கர நாராயணன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் சென்னை புறநகரில் பணியாற்றும் வடமாநில கட்டிடத்தொழிலாளிகள், ஓட்டல்களில் பணியாற்றும் தொழிலாளிகளை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் நங்கநல்லூர் லட்சுமி நகர், 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(65). இவர், மத்திய அரசின் தொழிலாளர் வைப்பு நிதியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு மனைவியுடன் அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட கீழ் வீட்டில் வசிப்பவர்கள், அமெரிக்காவில் உள்ள சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர், உடனடியாக தனது உறவினரை அனுப்பி பார்க்கும்படி கூறினார். அதில் மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story