பொறாமையால் முதல்-அமைச்சர் மீது விமர்சனம்: மக்களின் நலன் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை அமைச்சர் பேட்டி


பொறாமையால் முதல்-அமைச்சர் மீது விமர்சனம்: மக்களின் நலன் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 23 Sept 2019 4:30 AM IST (Updated: 23 Sept 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

பொறாமையால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்வதாகவும், மக்களின் நலன் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் சேலத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

சேலம்,

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்கும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அது தொடர்பாக வெள்ளை அறிக்கையை மு.க.ஸ்டாலின் கேட்பது தேவையில்லாத ஒன்று. காரணம் என்ன வென்றால், ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அதில், ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அமைதி பூங்காவாக திகழும்

அதன் அடிப்படையில் அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் படிப்படியாக தொழில்கள் தொடங்கும் நபர்களுக்கு பல்வேறு வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டு தொழில்கள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.8 ஆயிரத்து 830 கோடி அளவிற்கு தொழில் முதலீடு பெற்று தமிழகம் திரும்பி உள்ளார். அவர் மீது உள்ள பொறாமையின் காரணமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் தமிழக மக்களின் நலன் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.

தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகள் வந்தால் அதன்மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகும் பட்சத்தில் அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு அதிக பற்றும், பாசமும் வந்துவிடும். இதனாலும், முதல்-அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்ற வெறித்தனத்தாலும் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டு வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

ஓய்வூதிய பணப்பயன்கள்

முன்னதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வுபெற்ற 6 ஆயிரத்து 283 தொழிலாளர்களுக்கு ரூ.1093 கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆட்சியிலும் இதுபோன்ற தொகை வழங்கியது கிடையாது. சேலத்தில் விரைவில் நவீன வசதிகளுடன் பஸ் போர்ட் அமைக்கப்படும், என்றார்.


Next Story