தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடியுமா? அதிகாரிகள் ஆய்வு


தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடியுமா? அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 22 Sep 2019 10:00 PM GMT (Updated: 22 Sep 2019 7:44 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடியுமா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வண்டலூர்,

தீபாவளி, பொங்கல் பண்டிகையொட்டி சென்னையில் தங்கி வேலை செய்யும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் தற்காலிக பஸ் நிலையங்கள் போக்குவரத்து துறை சார்பில் அமைக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் வருகிறது.

அதற்காக தற்காலிக பஸ் நிலையம் அமையவுள்ள இடத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்ட கிளாம்பாக்கத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முக்கிய பண்டிகையையொட்டி சென்னையில் தங்கியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வசதியாக சென்னையில் கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்படும்.

இதில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வழியாக பெரும்பாலான பஸ்கள் செல்லும். தற்போது கிளாம்பாக்கம் பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் ரூ.394 கோடி செலவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தீபாவளி பண்டிகையை யொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடியுமா? என முதல் கட்டஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story