ஆலங்குடி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அரசு சார்பில் அமைக்க வேண்டும்


ஆலங்குடி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அரசு சார்பில் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:15 AM IST (Updated: 23 Sept 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அரசு சார்பில் அமைக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற வர்த்தக கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதற்கு கழகத்தின் தலைவர் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கருப்பையா, முகமது அஸ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணை தலைவர் சீனு.சின்னப்பா வணிக கொடியை ஏற்றி வைத்தார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மண்டல செயலாளர் தமிழ்ச்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். செயலாளர் சாந்தம் சவரிமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கதிரவன் வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். கூடுதல் செயலாளர் சம்பத் குமார் கூட்டத்தை தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வாசனை திரவிய தொழிற்சாலை

கூட்டத்தில் நகராட்சி மற்றும் மின்சார வாரியம் இணைந்து நகர் பகுதியில் உள்ள தெருக்களில் மின் கம்பிகள் மீது சாய்ந்து உள்ள மரக்கிளைகளை வெட்டி சீர்செய்ய வேண்டும். 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் முடிவினை முற்றிலும் வாபஸ் பெற வேண்டும். போராடி வரும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த புதிய உத்தரவை நிரந்தரமாக வாபஸ்பெற வேண்டும். புதுக்கோட்டை நகரில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். புதுக்கோட்டை நகரில் ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெயில்வே நிர்வாகம் தமிழகத்தில் மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய பணிகளில் கட்டாயம் தமிழ் தெரிந்த அலுவலர்களை மட்டும் நியமிக்க வேண்டும். மீண்டும் பழைய அரசு மருத்துவமனை நகரத்துக்குள் திறந்து செயல்பட வைக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக பழனிக்கு புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும். ஆலங்குடி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அரசு சார்பில் அமைக்க வேண்டும். ஆலங்குடியில் இருந்து சிவகாசிக்கு எஸ்.இ.டி.சி. பஸ் வசதி செய்துதர வேண்டும்.

போக்குவரத்து போலீஸ் நிலையம்

கறம்பக்குடியில் பாரத் ஸ்டேங் வங்கி கிளை அமைக்க வேண்டும். கறம்பக்குடி பஸ் நிலையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். கறம்பக்குடியில் புதியதாக போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். திருமயம் வழியாக சென்னை செல்லும் விரைவு ரெயிலில் ஏதாவது ஒரு ரெயில் திருமயத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பஸ்களும் திருமயம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story