கர்ப்பிணியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன் கைது - பரபரப்பு வாக்குமூலம்


கர்ப்பிணியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன் கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 Sep 2019 10:45 PM GMT (Updated: 22 Sep 2019 8:30 PM GMT)

அம்மூர் அருகே நரசிங்கபுரத்தில் கர்ப்பிணியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகம் அடைந்து அடித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளர்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

அம்மூரை அடுத்த நரசிங்கபுரம் பைரவா காலனியில் வசிப்பவர் செல்வம் (வயது23), கட்டிட மேஸ்திரி. இவருக்கும் சேவூரை சேர்ந்த எல்லப்பனின் மகள் தனலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. செல்வத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் செல்வத்திற்கும், தனலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி தனலட்சுமி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தனலட்சுமியின் அண்ணன் கண்ணன் என்பவர் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆகியிருப்பதால் தனலட்சுமியின் சாவுக்கான காரணம் குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தனலட்சுமி இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவருடைய கணவர் செல்வமே, தனலட்சுமியை அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

அப்போது செல்வம், தங்களுக்கு ஒரு வயதில் பவித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. தனலட்சுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருடைய நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டதாக கூறியுள்ளார்.

மேலும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது தனலட்சுமி ஆடை விலகியபடி தூங்கியதால் ஆத்திரமடைந்து அவரை தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் பயந்து தனலட்சுமியை சேலையால் தூக்கில் தொங்கவிட்டேன். இதை பார்ப்பவர்கள் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்புவார்கள் என நினைத்து தான் அவ்வாறு செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

Next Story