நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், அம்மா திட்ட முகாம்கள் ரத்து - மனுக்கள் போடுவதற்கு பெட்டி வைக்கப்பட்டது


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், அம்மா திட்ட முகாம்கள் ரத்து - மனுக்கள் போடுவதற்கு பெட்டி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 23 Sept 2019 4:00 AM IST (Updated: 23 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் அம்மா திட்ட முகாம்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி அங்கு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை போடுவதற்கு ஒரு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் கலெக்டரால் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வருவாய் துறையால் நடத்தப்படும் மனுநீதிநாள் முகாம், அம்மா திட்ட முகாம்கள் ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது.

எனவே பொதுமக்கள் கோரிக்கை ஏதேனும் இருந்தால், அதற்கான மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் போட்டு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக பிரதான கட்டிடத்தில் தரைதளத்தில் நுழைவு வாசலில் வரவேற்பு அறை அருகே மனுக்கள் பெட்டி நேற்று வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரில் வழங்க அனுமதி கிடையாது. அதற்கு பதிலாக தங்களது மனுவை இந்த பெட்டியில் போட்டால் தினமும் மாலையில் அந்த மனுக்களை எடுத்து நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story