ராமேசுவரம், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு 3 மாதத்தில் ரெயில் சேவை - அதிகாரி தகவல்
ராமேசுவரம், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு 3 மாதத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விருதுநகர்,
சமீபத்தில் திருச்சியில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென் பகுதி எம்.எல்.ஏ.க்கள் மதுரை-கோவை இடையே அகல ரெயில் பாதை திட்ட பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு ரெயில்கள் இயக்க வேண்டுமென வலியுறுத்தினர். அப்போது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
இதன்படி ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை வழியாக கோவைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி-கோவை பயணிகள் ரெயிலில் 11 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதில் 9 பெட்டிகளில் பயணிகள் உட்கார்ந்து செல்லும் வசதி செய்யப்பட்டிருக்கும். 2 ரெயில் பெட்டிகளில் சரக்குகள் கொண்டு செல்லப்படும்.
இந்த ரெயில்கள் அடுத்த 3 மாதங்களில் இயக்கப்படுகிறது. இதற்கான கால அட்டவணை தென்னக ரெயில்வே நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் விருதுநகர் பகுதி மக்கள் கோவைக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். தற்போது உள்ள நிலையில் தென் மாவட்டத்திற்கு ஒரு பயணிகள் ரெயில் மட்டும் தான் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story