மராட்டிய சட்டசபை தேர்தல்: பா.ஜனதா-சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு - கூட்டணி முறியுமா? பரபரப்பு தகவல்கள்
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதனால் கூட்டணி முறியுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் அடுத்த மாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன. அந்த கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிட்டு, எஞ்சிய 38 தொகுதிகளை கூட்டணியில் இடம்பெறும் மற்ற சிறிய கட்சிகளுக்கு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளன.
ஆனால் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளின் கூட்டணி உறுதியாகிவிட்டபோதிலும், அந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை. இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் என்று கடந்த 20-ந் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மும்பை வருவதாகவும், அன்றைய தினம் அல்லது அதற்கு முன்பாகவே தொகுதி பங்கீடு ஏற்படும் என்று சிவசேனா தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அதன்படி அமித்ஷா நேற்று மும்பை வருகை தந்தார். அப்போது இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
மும்பை பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்திருந்த பிரசார கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம், தேர்தல் வெற்றி உள்ளிட்ட விஷயங்களை நீண்ட நேரம் பேசினார். ஆனால் கூட்டணி கட்சியான சிவசேனா பெயரை குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்தார்.
அமித்ஷா பேசுகையில், “மராட்டிய தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி 4-ல் 3 பங்கு இடங்களை கைப்பற்றும். மராட்டியத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி தொடரும்” என தெரிவித்தார்.
ஏற்கனவே சிவசேனாவில் தாக்கரே குடும்பத்தை சேர்ந்த ஆத்திய தாக்கரேவை அரசியல் களத்தில் இறக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அவரும் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பார் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமித்ஷா தனது பேச்சில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று குறிப்பிட்டாரே தவிர பா.ஜனதா, சிவசேனா கூட்டணி என்றோ அல்லது சிவசேனாவின் பெயரை குறிப்பிட்டோ பேசாதது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் இடையே யார் பெரிய அண்ணன்? என்ற போட்டி உருவானது. சிவசேனாவுக்கு கூடுதல் தொகுதிகளை விட்டு கொடுக்க மறுத்ததால் கூட்டணி முறிந்தது.
இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா ஆர்வம் காட்டியது. அப்போது மும்பை வந்த அமித்ஷா ‘மதோஸ்ரீ’ இல்லத்திற்கு சென்று சுமார் 3 மணி நேரம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து கூட்டணி உருவானது.
ஆனால் இந்த முறை சிவசேனாவை பா.ஜனதா கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மும்பை வந்த அமித்ஷா ‘மாதோ’ இல்லத்துக்கும் செல்லவில்லை. எனவே 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும் கூட்டணியில் முறிவு ஏற்படுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சிவசேனா கட்சி தங்களுக்கு சரிசமமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் அதற்கு பா.ஜனதா சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜனதா 122 இ்டங்களையும், சிவசேனா 63 இடங்களை யும் கைப்பற்றியது குறிப்பிடத் தக்கது.
Related Tags :
Next Story