காங்கேயத்தில் காளை நினைவு சின்னத்தை உடனே நிறுவ வேண்டும்; காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


காங்கேயத்தில் காளை நினைவு சின்னத்தை உடனே நிறுவ வேண்டும்; காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 3:10 PM GMT)

காங்கேயத்தில் காளை நினைவு சின்னத்தை உடனே நிறுவ வேண்டும் என்று மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கேயம்,

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். மாவட்ட மற்றும் வட்டார நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அக்டோபர் 2-ந்தேதி மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி மாவட்ட அளவில் பாத யாத்திரை நடத்துதல், காந்தி ஜெயந்தி வார விழாவையொட்டி வட்டார அளவில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவது.

பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக மாநில அளவில் அக்டோபர் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை போராட்டங்கள் நடத்துவது, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வட்டார,நகர அளவில் போராட்டம் நடத்துவது.

கட்சி நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி முகாம்கள் வருகிற அக்டோபர் மாதம் முதல் நடத்துவது, இந்த பயிற்சி முகாமில் அனைத்து நிர்வாகிகளையும் கலந்து கொள்ள செய்வது எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி முகாம்கள் நடத்துவது.

திருப்பூர் வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் நகர, வார்டு பகுதிகளிலும் கல்வெட்டுடன் கட்சி கொடிக்கம்பம், பெயர்ப்பலகை நிறுவுவது,முதல்-அமைச்சர் அறிவித்துள்ளபடி காங்கேயத்தில் காங்கேயம் காளை சிலை நினைவு சின்னத்தை உடனடியாக நிறுவ தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது,

காங்கேயம்-கரூர் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்துவது, விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 5 விவசாயிகளை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பது, கட்சியின் எதிர்கால வளர்ச்சி பணிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் கட்சியை வலுப்படுத்துகிற நடவடிக்கைகளை முடுக்கி விடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Next Story