மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி என்றதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நர்சிங் உதவியாளர்கள் முற்றுகை


மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி என்றதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நர்சிங் உதவியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 2019-09-24T00:09:29+05:30)

மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி என்றதால் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நர்சிங் உதவியாளர்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 1,234 கிராம சுகாதார செவிலியர்(பெண்கள்) காலிப்பணியிடங்களுக்கான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த பெண் பதிவுதாரர்கள், உரிய கல்விச்சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள கலெக்டர் எஸ்.சிவராசு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்காக, நேற்று ஓராண்டு நர்சிங் உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் சரிபார்க்க குவிந்தனர். அப்போது நர்சிங் உதவியாளர் சான்றிதழ்களை சரிபார்த்த வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள், பயிற்சி முடித்தவர்கள் சென்னையில் உள்ள மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், மற்றவர்கள் வரத் தேவையில்லை என்றும் திடீரென புதிய நிபந்தனையை விதித்தனர்.

கடும் வாக்குவாதம்

இது அங்கு பட்டியல் சரிபார்க்க வந்த 200-க்கும் மேற்பட்ட நர்சிங் உதவியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதிலும் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் ஓராண்டு படித்தவர்கள் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆவர். கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுபோன்ற நிபந்தனை ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றும், சென்னை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டுமானால், 2 ஆண்டு பயிற்சி முடித்தவர்கள்தான் பதிவு செய்ய முடியும் என்று அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அனைவரும் ஒருங்கிணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று முற்றுகையிட்டனர். பின்னர், கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து மனு கொடுத்தனர். அவர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரை சந்தித்து பேசுங்கள் என்றார். உடனடியாக அனைவரும் துணை இயக்குனர் அலுவலகம் சென்றனர். அங்கு துணை இயக்குனர் இல்லாததால் அனைவரும் திரும்பி சென்றனர்.

Next Story