பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரின் வங்கி கணக்கில் ஆன்-லைன் மூலம் ரூ.18½ லட்சம் மோசடி


பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரின் வங்கி கணக்கில் ஆன்-லைன் மூலம் ரூ.18½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 24 Sept 2019 3:45 AM IST (Updated: 24 Sept 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன்மூலம் ரூ.18½ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அரியமங்கலம் தஞ்சாவூர் ரோட்டில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இதற்காக இ.பி. ரோட்டில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளையில் நாகராஜன் நடப்பு கணக்கு வைத்துள்ளார்.

இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு சம்பவத்தன்று அதிகாலை ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 லட்சத்து 62 ஆயிரத்து 600 எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வங்கியில் விசாரித்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து அந்த பணம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. ‘ஹேக்கர்’கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாகராஜன் புகார் அளித்தார். இதையடுத்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு குறித்து போலீசார் கூறுகையில், “நாகராஜன் வங்கி கணக்கில் ஆன்-லைன் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி பணத்தை நூதனமாக திருடியுள்ளனர். அதாவது அவரது வங்கி கணக்கில் இருந்து வெவ்வேறு கணக்குகளுக்கு பணத்தை மாற்றி உள்ளனர். வங்கியில் இருந்து எந்த கணக்கிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அந்த கணக்கு யாருடையது, அந்த கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய பின்பு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Next Story