குடிநீர் வழங்காததை கண்டித்து: கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் - ரேஷன் கார்டுகளை வீசி எறிந்தனர்


குடிநீர் வழங்காததை கண்டித்து: கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் - ரேஷன் கார்டுகளை வீசி எறிந்தனர்
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 24 Sept 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள், ரேஷன்கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எலாவூர் ஊராட்சிக்குட்பட்ட மதுக்கால் கிராமம், ஆலப்பிள்ளை கண்டிகை, ஆலமரத்துக்காலனி போன்ற 3 கிராமங்களில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் குறைந்த நிலையில், அதிகாரிகள் மூலம் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதியன்று அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து அவரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர். அப்போது அவர்கள் கையில் ரேஷன் கார்டு, மற்றும் ஆதார் அட்டைகளை ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அம்மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story