உத்தமபாளையம் அருகே, வகுப்பறையில் காதல் லீலையில் ஈடுபட்ட ஆசிரியை-ஆசிரியர் பணியிடை நீக்கம்


உத்தமபாளையம் அருகே, வகுப்பறையில் காதல் லீலையில் ஈடுபட்ட ஆசிரியை-ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 24 Sept 2019 4:45 AM IST (Updated: 24 Sept 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே வகுப்பறையில் காதல் லீலையில் ஈடுபட்ட ஆசிரியை-ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமிநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஆரோக்கியராஜ் பணியாற்றி வருகிறார். ஆசிரியையாக லீனாபுஷ்பராணி பணியாற்றி வந்தார். பள்ளியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4 பேர் மட்டுமே.

இங்கு பணியாற்றி வரும் ஆசிரியை லீனாபுஷ்பராணிக் கும் அந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஜான்சத்தியபாபுவுக்கும் பழக்கம் இருந்தது. இவர்கள் 2 பேருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வராத நாட்கள் மற்றும் மதிய நேரத்தில் ஆசிரியர் ஜான்சத்தியபாபு ஆசிரியை லீனாபுஷ்பராணியை பார்க்க வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் வகுப்பறையில் இல்லாதபோது இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டு வந்தனர். இதனை ஆசிரியர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அவர் அந்த காட்சிகளை வாட்ஸ்- அப்பில் உள்ள ஆசிரியர் குழுவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த காதல் லீலை காட்சிகள் சமூக வலைதளங் களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் விளக்கம் கேட்டு இருந்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி உத்தமபாளையம் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் சுரேஷ், வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி ஆகியோர் ஆசிரியை லீனாபுஷ்பராணியிடம் விசாரணை நடத்தினர். இதில் வாட்ஸ்-அப்பில் பரவிய காதல் லீலை காட்சிகள் அனைத்தும் உண்மையாக உள்ளதற்கான முகாந்திரம் இருப்பதாக அவர்கள் மாவட்ட கல்வி அதிகாரி திருப்பதியிடம் அறிக்கை கொடுத்தனர். இதையடுத்து ஆசிரியை லீனாபுஷ்பராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இதே போன்று ஆசிரியர் ஜான்சத்தியபாபுவிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு விளக்கம் கோரப்பட்டது. இதையடுத்து அவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் பல்லவிபல்தேவ் கூறும்போது, மாணவர்களுக்கு ஒழுக்க நெறியை போதிக்கும் கலைக்கோவிலாக விளங்கும் பள்ளிக் கூடங்களில் ஆசிரியர் பணிக்கு முற்றிலும் ஒவ்வாத செயலை செய்துள்ளனர். இதனால் கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்த போது போதுமான முகாந்திரம் உள்ளதை அறிய முடிந்தது. இதையடுத்து 2 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Next Story