சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை - 21 ஆண்டுக்கு பிறகு பழிக்குப்பழி தீர்த்த கொடூரம்


சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை - 21 ஆண்டுக்கு பிறகு பழிக்குப்பழி தீர்த்த கொடூரம்
x
தினத்தந்தி 23 Sep 2019 11:30 PM GMT (Updated: 23 Sep 2019 7:15 PM GMT)

21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 38). பிரபல ரவுடியான இவர் பெயின்டர் வேலை செய்து வந்தார். தமிழரசன் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள லாசர் தெரு சந்திப்பில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் அவரை திடீரென சுற்றி வளைத்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. தமிழரசன் தன்னை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல், தமிழரசனை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது.

உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்டு, பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தமிழரசன் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. தமிழரசன் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பே சசி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழரசனுக்கும், பாம்பே சசி உறவினர் இமான் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இமான் தனது நீண்ட நாள் பகையை தீர்த்துக்கொள்ள, பாம்பே சசியின் மகன் நவீன், மற்றும் கூட்டாளிகள் அஜய், விவேக், தாவீது ஆகியோருடன் வந்து தமிழரசனை தீர்த்து கட்டியது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் இமான் உள்பட 5 பேரும் நேற்று மாலை திருவள்ளூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க தமிழரசன் தீர்த்து கட்டப்பட்டுள்ள சம்பவம் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story