குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 7:50 PM GMT)

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர்கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் தாந்தோன்றி ஒன்றியம் பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த சில வாரங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அருகிலுள்ள தெருக்களுக்கு அலைந்து திரிந்து குடிநீர் பிடித்து வர வேண்டியுள்ளது. மேலும் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டியும் சேதமடைந்து கிடக்கின்றன. எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

ஒப்பந்த தொழிலாளர்கள் மனு

கரூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், நாங்கள் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பெறப்படும் நீரை மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைத்து அதனை குடியிருப்புகளுக்கு வினியோகிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு அரசு நிர்ணயித்தபடி இல்லாமல் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த சம்பளம் வழங்கிட வேண்டும். மேலும் இந்த பணிகளை செய்ய ஆள்பற்றாக்குறையாக இருப்பதால் குடிநீர் வினியோக பணிகள் பாதிப்படைகிறது. எனவே அதற்குரிய காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

பழுதடைந்த தெருவிளக்குகள்

லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜ் அளித்த மனுவில், லாலாபேட்டையில் மூடப்பட்டுள்ள ரெயில்வே கேட், இரவு நேரத்தில் போதிய மின்விளக்கு வசதியில்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதனை சீர்செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஈசநத்தம் புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டியை சீர்செய்து வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். தவுட்டுப் பாளையத்தை சேர்ந்த புனிதா என்பவர் அளித்த மனுவில், தனது மகள் சவுமியா சிறுநீரக கோளாரால் அவதிப்பட்டு வருகிறார். எனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு கொடுத்தார்.

வெள்ளியணை தென்பாகம் மேட்டுப்பட்டியை சேர்ந்த அப்புசாமி அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள நடுமேட்டுப்பட்டி, கம்பளிநாயக்கன்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனை சரிசெய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கள் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைந்த நாட்களில் தான் வேலை வழங்கப்படுகிறது. எனவே தொடர்ச்சியாக வேலை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

உழவு எந்திரங்கள் வாடகை

கரூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் திருநாவுக்கரசுராஜா, ஆனந்தன், கோபிநாத் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டதால் சேதமடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள் மூலம் ஏற்படுகிற மின்விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரூர் அமராவதி ஆற்றில் திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாய உழவு எந்திரங்கள் உள்ளிட்டவை அரசு சார்பில் வாடகைக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை பயன்படுத்திட வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

சாயக்கழிவினால் நீர்மாசுபாடு

கரூர் வஞ்சியம்மன்கோவில் தெருவை சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சூர்யாகதிரவன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் வெளியேற்றப்படும் சாயப்பட்டறை கழிவினால் நிலத்தடிநீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுற்றுவட்டார பகுதியில் ஆழ்துளை கிணறு, குடிநீர் கிணறுகளில் நீரானது மாசடைந்து கலங்கலாக மாறி வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாயக்கழிவினை வெளியேற்றுவதை முறைப்படுத்திட வேண்டும் என்று கூறி கலங்கலான குடிநீரை பாட்டில்களில் எடுத்து வந்து காண்பித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதில் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி கொடுக்க சிலர் பணம் கேட்பதாக பெண் ஒருவர் குற்றசாட்டினை முன் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டபோது, மனு எழுதி கொடுக்க இலவசமாக ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும், பணம் அதிகமாக வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

Next Story