ராமநாதபுரம் வனத்துறை அலுவலர்களுக்கு வனவிலங்கு, கடல் உயிரின மாதிரி சேகரிப்பு செயல்முறை பயிற்சி


ராமநாதபுரம் வனத்துறை அலுவலர்களுக்கு வனவிலங்கு, கடல் உயிரின மாதிரி சேகரிப்பு செயல்முறை பயிற்சி
x
தினத்தந்தி 23 Sep 2019 9:45 PM GMT (Updated: 23 Sep 2019 7:54 PM GMT)

ராமநாதபுரம் வனத்துறை அலுவலர்களுக்கு வனவிலங்கு மற்றும் கடல்வாழ் உயிரின மாதிரி சேகரிப்பு குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் சென்னை வண்டலூர் மேம்படுத்தப்பட்ட வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் வனவிலங்கு மாதிரி சேகரிப்பு செயல்முறை பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் வனஉயிரின காப்பாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். உதவி வன காப்பாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்டத்தில் உள்ள வனச்சரகர்கள், வனவர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வனவிலங்குகளின் மாதிரிகளை முறையாக சேகரிப்பது தொடர்பாக செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. வனவிலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் இறந்துவிட்டால் அதன் உடல்பாகங்களில் இருந்து மாதிரிகள் பாதுகாப்பாக சேகரிப்பது எப்படி என்பது குறித்து இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக இறந்த வனவிலங்குகள், கடல்வாழ் உயிரினங்களின் ரத்த மாதிரி, உடல்பாக மாதிரி, சதைகள், எலும்புகள் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு தேவையான அனைத்து பாகங்களையும் பாதுகாப்பான முறையில் சேகரிப்பது, அதனை கெட்டுப்போகாமல் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை வனஉயிரின மையத்தில் இருந்து கால்நடை மருத்துவர் டாக்டர் சிவபிரசாத் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ராமநாதபுரம் வந்து இந்த பயிற்சியை அளித்தனர். ராமநாதபுரம் வனத்துறை அலுவலக வளாகத்தில் இறந்த வன உயிரினங்கள் மற்றும் மரங்களில் படிந்துள்ள உயிரினங்களின் திசுக்கள் உள்ளிட்ட மாதிரிகளை எவ்வாறு பாதுகாப்பாக சேகரிப்பது என்று செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் உயிரினங்கள், விலங்குகளின் தன்மை, இறந்ததற்கான காரணம், வயது, இனம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாதிரிகளின் சேகரிப்பில் கண்டறிய முடியும். இந்த மாதிரிகள் இதுவரை இந்திய வனஉயிரின பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இனி சென்னை வண்டலூர் மையத்திற்கு நேரடியாக அனுப்பி பரிசோதிக்கப்படும். இதுநாள்வரை முறையான பயிற்சி இல்லாமல் மாதிரிகளை சாதாரணமாக சேகரித்தவர்கள் இனி முறைப்படி பாதுகாப்பான முறையில் மாதிரிகளை சேகரிப்பார்கள். இதற்காக அலுவலர்களுக்கு மாதிரி சேகரிப்பு பரிசோதனை கருவிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Next Story