கலெக்டர் அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 24 Sept 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி,

மணப்பாறை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சேசுரத்தினம் தலைமையில் செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் மணப்பாறை, மஞ்சம்பட்டி, மலையடிப்பட்டி, பொய்கைபட்டி, முள்ளிப்பாடி, நடுகாட்டுப்பட்டி, ஆவாரம்பட்டி, செவலூர், கல்யாணத்தான்பட்டி, புதுப்பட்டி, நொச்சிமேடு, வெள்ளைக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களான ஆண்கள், பெண்கள் என திரளானவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

பின்னர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் அவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அரசு தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.4-ம், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.6-ம் என கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்தது. அதன்படி, பசும்பால் லிட்டருக்கு ரூ.32 என விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், திருச்சி மாவட்ட ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு ரூ.2 மட்டும் உயர்த்தி ரூ.30 மட்டுமே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி ஏமாற்றுகிறது.

அதேபோல் கடந்த காலங்களில் போனஸ் லிட்டருக்கு 1 ரூபாய் 50 காசு வீதம் வழங்கியது. ஆனால், தற்போது அதைவிட குறைவாக வழங்குகிறது. எனவே லிட்டருக்கு 1 ரூபாய் 75 காசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் பாலுக்கான பணப்பட்டுவாடா காலதாமதம் செய்வதை தவிர்த்து 5 மற்றும் 20-ந் தேதிகளில் முறையாக வழங்க வேண்டும். மேலும் கால்நடைகளுக்கான தீவனத்திற்கு மானியம், மானிய விலையில் தவிடு, கறவை மாடுகள் இறந்தால் காப்பீடு தொகையை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை, குறிப்பிட்டிருந்தனர்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்

கவுத்தரசநல்லூரை சேர்ந்தவர் செந்தில்குமார். பெயிண்டர். இவரது மனைவி மோகனப்பிரியா. இத்தம்பதிக்கு 7 வயதில் காவியாஸ்ரீ என்ற மகளும், 4 வயதில் நிரஞ்சன் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் மனவளர்ச்சி குன்றியவர்கள். மேலும் இருவராலும் நடக்கவும் முடியாது. இந்நிலையில் அக்குழந்தைகளுடன் வறுமையில் வாடுவதாகவும், கிளிக்கூடு சத்துணவு மையத்தில் சமையலர் பதவி காலியாக இருப்பதால், தனக்கு அங்கு சமையலர் பணி வழங்க வேண்டும் என்றும் மோகனப்பிரியா குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

இதேபோல் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் ஷேக்அப்துல்லா கொடுத்த மனுவில், மத்திய அரசால் சிறுபான்மை சமூக மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் மாநில அரசால் திரும்ப அனுப்பப்படுகிறது. எனவே, கல்வி ஊக்கத்தொகை குறித்த விழிப்புணர்வை மாணவ-மாணவிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தரமற்ற பூச்சு

திருச்சி மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், திருச்சி மாநகராட்சி 14, 15-வது வார்டு பகுதியான தஞ்சாவூர் சாலையில் பூக்கொல்லை சுப்பராயர் கோவில் நடுவில் வாய்க்கால் கரையை கான்கிரீட் போட்டு தடுப்புச்சுவர் கட்ட மாநகராட்சி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால், தரமானதாக அமைக்காமல் எம்.சாண்ட் மூலம் தரமற்ற பூச்சு பூசப்பட்டுள்ளது. எனவே, இந்த முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

Next Story