கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்து சென்று தீவிரவாத அமைப்பின் தலைவனிடம், ‘என்.ஐ.ஏ.’ அதிகாரிகள் விசாரணை


கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்து சென்று தீவிரவாத அமைப்பின் தலைவனிடம், ‘என்.ஐ.ஏ.’ அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 24 Sept 2019 4:45 AM IST (Updated: 24 Sept 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்து சென்று தீவிரவாத அமைப்பின் தலைவனிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் நேற்று விசாரணை நடத்தினார்கள். அவரிடம் இருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜே.எம்.பி.) என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் கவுசர் என்கிற ஜஹிதுல் இஸ்லாம் (வயது 39) என்பவரை தேசிய புலனாய்வு பிரிவினர் (என்.ஐ.ஏ.) கைது செய்தனர். இவர் வங்காளதேசம் ஜமால்பூர் மாவட்டம் சேகர்விக்கே கிராமத்தை சேர்ந்தவர்.

விசாரணையில் அவர் இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் நடந்த வெடிகுண்டு வழக்கு, 2018-ம் ஆண்டு போத்கையா வெடிகுண்டு வழக்கு ஆகியவற்றில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் கர்நாடக மாநிலம் சோலதேவனஹள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பு வழக்கு உள்பட மேலும் சில வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார்.

கிருஷ்ணகிரியில் வெடிகுண்டு

கவுசரிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரியில் உள்ள சையத்பாஷா மலையில் பதுங்கி இருந்து வெடிகுண்டுகளை தயார் செய்து சோதனைகள் நடத்தியதும், நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பின் போலீஸ் சூப்பிரண்டு சி.வி.சுப்பாரெட்டி தலைமையில் கர்நாடகாவை சேர்ந்த 25 போலீசார் நேற்று 4 வாகனங்களில் தீவிரவாதி கவுசரை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அங்குள்ள மலைக்கு அழைத்து சென்று, எந்த இடத்தில் வெடிகுண்டுகள் தயார் செய்தாய்?, சோதனை செய்தாய்? என தீவிரவாதியிடம் விசாரணை நடத்தினார்கள்.

பரபரப்பு

அப்போது கவுசர் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு சோதனை நடத்த பயன்படுத்திய பைப்புகள், 4 பேட்டரி, மஞ்சள், சிவப்பு நிற வயர்கள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் இந்த விசாரணை நடந்தது.

இதைத் தொடர்ந்து தீவிரவாதி கவுசரை தேசிய புலனாய்வு பிரிவினர் பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர். தீவிரவாதியை அழைத்து வந்து விசாரணை நடத்திய சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story