விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளிக்கு ந‌‌ஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளிக்கு ந‌‌ஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 23 Sep 2019 10:45 PM GMT (Updated: 23 Sep 2019 9:01 PM GMT)

விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளிக்கு ந‌‌ஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நேற்று நாமக்கல் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சித்திரைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பு என்கிற காசி (வயது 50). இவர் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் தங்கி கரும்பு ஆலை ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் நெட்டையம்பாளையம் பகுதியில் நடந்து சென்ற இவர் மீது பின்னால் வந்த சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த காசி அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அரசு பஸ் ஜப்தி

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் பாதிக்கப்பட்ட காசிக்கு ரூ.13 லட்சத்து 2 ஆயிரத்து 200 ந‌‌ஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ந‌‌ஷ்டஈட்டு தொகை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து காசி அதே நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி லதா, சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று நாமக்கல்லில் இருந்து எடப்பாடிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அரசு பஸ் கோர்ட்டு அமீனா முன்னிலையில் ஜப்தி செய்யப்பட்டது. இந்த சம்பவம் நேற்று நாமக்கல் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story