போராட்டத்தில் அரசு பஸ்களை சேதப்படுத்திய 11 பேர் கைது
டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநகரில் நடந்த போராட்டத்தில் அரசு பஸ்களை சேதப்படுத்தியதாக 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு,
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியான டி.கே.சிவக்குமாரை கடந்த 3-ந் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து பெங்களூரு, ராமநகர் உள்பட மாநிலம் முழுவதும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது ராமநகர் மாவட்டம் கல்லஹள்ளி கேட் மற்றும் ஒய்யம்பள்ளி பகுதியில் 2 அரசு பஸ்களை சிலர் தீவைத்து எரித்தனர்.
மேலும் 11 அரசு பஸ்களின் கண்ணாடிகளையும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கி உடைத்தனர். இதுகுறித்து கனகபுரா, சாத்தனூர், கோடிஹள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ராமநகர் போலீஸ் சூப்பிரண்டுக்கு, ராமநகர் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, அரசு பஸ்களுக்கு தீவைத்தவர்களை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், தீவைத்தல், கண்ணாடிகளை உடைத்தல் என அரசு பஸ்களை சேதப்படுத்திய 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அதாவது கனகபுரா போலீசார் 5 பேரையும், சாத்தனூர் போலீசார் 5 நபர்களையும், கோடிஹள்ளி போலீசார் ஒரு நபரையும் கைது செய்து உள்ளனர். விசாரணைக்கு பின்பு 11 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story