பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவி: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா ஆலோசனை
பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு என்பது குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன், முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
மேயர் பதவி பத்மநாபரெட்டிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் மேயராக பதவி வகித்து வரும் கங்காம்பிகேயின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நிலைக்குழு உறுப்பினர்களின் தேர்தலையும் அதே நாளில் நடத்த வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியது.
இந்த நிலையில் மேயர் தேர்தல் 27-ந் தேதிக்கு பதிலாக வருகிற 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேயர், துணை மேயர், 12 நிலைக்குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 4 ஆண்டுகள் மேயர் பதவியை காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சி துணை மேயர் பதவியையும் பகிர்ந்து கொண்டன.
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. அதனால் சுயேச்சை கவுன்சிலர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேயர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பா.ஜனதாவில் மேயர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது குறித்து பெங்களூரு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரிகள் ஆர்.அசோக், சுரேஷ்குமார் மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கவுன்சிலர் சீனிவாசுக்கு மேயர் பதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ., மாநகராட்சியில் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள பத்மநாபரெட்டிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. பத்மநாபரெட்டிக்கு மேயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story