சட்டசபை இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை


சட்டசபை இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 23 Sep 2019 11:45 PM GMT (Updated: 23 Sep 2019 11:45 PM GMT)

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் 17 தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றில் ராஜராஜேஸ்வரிநகர், மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

மனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. அதனால் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. இன்னொருபுறம், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மனு மீது விசாரணை நடைபெற்றபோது வக்கீல் முகுல் ரோட்டகி வலியுறுத்தினார். அதனால் எப்படியும் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பில் பா.ஜனதா உள்ளது.

ஜனதா தளம்(எஸ்) கட்சியும் இடைத்தேர்தலை சந்திக்க களத்தில் குதித்துள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 15 தொகுதிகளில் யாருக்கு டிக்கெட் வழங்குவது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

Next Story