கர்நாடக இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு


கர்நாடக இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
x
தினத்தந்தி 23 Sep 2019 11:48 PM GMT (Updated: 23 Sep 2019 11:48 PM GMT)

கர்நாடகத்தை சேர்ந்த தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அவர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்று வந்தது.

அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து கொறடா உத்தரவை மீறியதாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த எச்.விஸ்வநாத், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, பி.சி.பட்டீல் உள்பட 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு அவர்களின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ. சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோட்டகி ஆஜரானார். காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி இருந்தார். அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் விசாரணை தொடங்கியபோது, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வக்கீல் முகுல் ரோட்டகி வாதிடுகையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அவற்றை அங்கீகரிக்கவில்லை. அதற்கு பதிவாக அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். சபாநாயகரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதம். இந்த விஷயத்தில் இயற்கை நீதியின் கோட்பாடுகள் அனுசரிக்கப்படவில்லை. எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் அளிக்க 3 நாட்கள் மட்டுமே காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். அதை சபாநாயகர் வழங்கவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தை அடுத்து சட்டசபை கூட்டத்தில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. அதனால் சட்டசபைக்கு வராதது, எப்படி கொறடா உத்தரவை மீறியதாக கருதப்படும்?. ராஜினாமா செய்யும் முடிவு சுயமாக எடுத்திருந்தால் போதுமானது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.

ஆனால் சபாநாயகர் வேறு காரணத்தை சொல்லி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். அதனால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும். மனு தாக்கல் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். அதனால் உடனே உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஐதராபாத் ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு இடைத்தேர்தலுக்கு தடை விதித்த உதாரணம் இருக்கிறது.

இவ்வாறு முகுல் ரோட்டகி கூறினார்.

காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதிடுகையில், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது. அதற்கு அனுமதி வழங்கக் கூடாது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் ஒரு வாதி கிடையாது. அதனால் இந்த கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து எந்த கருத்தையும் கூறக்கூடாது. இந்த வழக்கில் விரிவான விசாரணை நடைபெற வேண்டியுள்ளது. அதனால் இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்“ என்றார்.

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் ராகேஷ் திவேதி வாதிடும்போது, “இந்த வழக்கில் நாங்களும் சேர தயார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை. இதற்கு எங்களது ஆட்சேபனை இல்லை“ என்றார்.

வக்கீல்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை 25-ந் தேதிக்கு (அதாவது நாளை) ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதுகுறித்து சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், கர்நாடக சட்டசபை சபாநாயகர் அலுவலகம் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விசாரணையின்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். நேற்று தங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கோர்ட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

Next Story