பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை; நள்ளிரவில் தலைவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு


பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை; நள்ளிரவில் தலைவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Sep 2019 12:25 AM GMT (Updated: 24 Sep 2019 12:25 AM GMT)

பா.ஜனதா, சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. இது தொடர்பாக நள்ளிரவில் தலைவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன. அந்த கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிட்டு, எஞ்சிய 38 தொகுதிகளை கூட்டணியில் இடம்பெறும் மற்ற சிறிய கட்சிகளுக்கு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளன.

ஆனால் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உறுதியாகிவிட்டபோதிலும், அந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே சட்டமன்ற தேர்தலுக்கான உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும், அதன்படி சரிசமமான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்ததாகவும் சிவசேனா கூறுகிறது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் தங்களது கட்சிக்கு செல்வாக்கு கூடியிருப்பதாக பா.ஜனதா கருதுகிறது. இதனால் பா.ஜனதா கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இந்த பரபரப்பான நிலையில் நேற்று முன்தினம் மும்பை வந்த அமித்ஷா பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார். அப்போது கூட்டணி கட்சியான சிவசேனாவின் பெயரை ஒரு இடத்திலும் சொல்லி பேசாதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. மீண்டும் இரு கட்சிகளின் உறவில் விரிசல் ஏற்பட்டதாக சலசலப்பு உண்டானது. கூட்டணி முறியுமா? என்ற சந்தேகத்தையும் கிளப்பியது.

இந்த நிலையில் நேற்று இரவு பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் வெளியிட்ட தகவலில் “முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என்றும், அப்போது தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை அறிவிப்பார்கள்” எனவும் தெரிவித்தார்.

மேலும் பா.ஜனதா கட்சி 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்ற 122 சட்டமன்ற தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஆனால் நள்ளிரவு நேரத்தை நெருங்கிய போது காட்சி மாறியது. பேச்சுவார்த்தையில் இறுதிவரை தொகுதி பங்கீடு குறித்த முடிவு எட்டப்படாத காரணத்தால் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் அனில் பரப் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளிவராது. பேச்சுவார்த்தை முடிந்ததும் பா.ஜனதா, சிவசேனாவின் முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.

பா.ஜனதாவின் மற்றொரு தலைவரும் இதே கருத்தை வெளியிட்டார். இதனால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இது மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story