39 ஆண்டுகளுக்கு முன்பு தத்துகொடுக்கப்பட்டவர்: பெற்றோரை தேடி டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்த மகன்


39 ஆண்டுகளுக்கு முன்பு தத்துகொடுக்கப்பட்டவர்: பெற்றோரை தேடி டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்த மகன்
x
தினத்தந்தி 24 Sep 2019 11:15 PM GMT (Updated: 24 Sep 2019 6:36 PM GMT)

39 ஆண்டுகளுக்கு முன்பு தத்துக்கொடுக்கப்பட்டவர் தனது பெற்றோரை தேடி டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்துள்ளார்.

திருச்சி,

வெளிநாட்டு தம்பதியினர் சிலர் இந்திய குழந்தைகளை தத்தெடுத்து தங்களது நாட்டில் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1980-ம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களது 2 மகன்களை டென்மார்க்கை சேர்ந்த வெவ்வேறு தம்பதிகளிடம் தத்துகொடுத்தனர். அதில் ஒருவர் தனது பெற்றோரை தேடி தமிழகம் வந்துள்ளார்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சாவூர் அம்மாபேட்டை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது கணவர் கலியமூர்த்தி. கடந்த 1980-ம் ஆண்டு தனது மகன்களான டேனியல் ராஜன், டேவிட் சாந்தகுமார் ஆகியோரை சென்னையில் வைத்து டென்மார்க்கை சேர்ந்த வெவ்வேறு தம்பதியினருக்கு தனலட்சுமி தத்து கொடுத்தார். இதில் 39 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்ட டேவிட் சாந்தகுமார் தற்போது தனது பெற்றோரை தேடி தமிழகம் வந்துள்ளார். அவருக்கு தற்போது 41 வயதாகிறது.

பெற்றோரை பார்க்க ஆசை

டென்மார்க்கில் இருந்து விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தார். அவருக்கு உதவியாக மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒரு அமைப்பின் இயக்குனர் அருண் மற்றும் வக்கீல் அஞ்சலி பவார் உடன் உள்ளனர். பெற்றோரை தேடி வந்தது குறித்து டேவிட் சாந்தகுமார், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

நான் 1½ வயது இருக்கும்போது தத்துகொடுக்கப்பட்டுள்ளேன். என்னை தத்தெடுத்தவர்கள் டென்மார்க்கில் நல்ல முறையில் வளர்த்ததோடு படிக்கவும் வைத்தனர். அவர்களது நிறத்திலும், எனது நிறத்திலும் வேறுபாடு இருந்ததால் நான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களும் என்னை தத்தெடுத்து வளர்த்த விவரத்தை கூறியிருக்கிறார்கள். எனது சகோதரரும் அங்கு தான் உள்ளார். ஆனால் நான் அவரை சந்தித்தது கிடையாது. அவர் வேறு பகுதியில் வசித்து வருகிறார். எனக்கு எனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனை வளர்ப்பு பெற்றோரிடம் கூறினேன். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். கடந்த 2013-ம் ஆண்டு நான் மட்டும் தனியாக வந்து எனது பெற்றோரை தேடிப்பார்த்தேன். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அடையாளம் காண முடியும்

கடந்த 2017-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஒரு அமைப்பை சேர்ந்த இயக்குனர் அருணை டென்மார்க்கில் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் தத்துகொடுக்கப்பட்ட விவரத்தையும், எனது பெற்றோரை பார்க்க விரும்புவதையும் கூறியிருந்தேன். மேலும் அவரிடமும் எனது பெற்றோரை கண்டுபிடித்து தரும்படியும் கேட்டிருந்தேன். அதன்அடிப்படையில் அவர்களும் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் நான் எனது பெற்றோரை தேடி நேரடியாக டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்துள்ளேன். எனது உடல் நிலையில் மாற்றம் இருந்தாலும் எனது முக அமைப்பை வைத்து நான் அவர்களது மகன் தான் என்பதை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேநேரத்தில் எனது தாயையும் நான் அடையாளம் காணமுடியும். ஏற்கனவே உள்ள பழைய புகைப்படத்தை சேகரித்து வைத்துள்ளேன். அதன் மூலம் அடையாளம் காண முடியும். எனது பெற்றோரை கண்டுபிடித்து விடலாம் என்ற ஆவலில் வந்துள்ளேன். எப்படியும் கண்டுபிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டேவிட் சாந்தகுமாருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். அவர் டென்மார்க்கில் பங்குசந்தை நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

29-ந் தேதி வரை...

டேவிட் சாந்தகுமாரின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்கீல் அஞ்சலி பவார் கூறுகையில், “டேவிட் சாந்தகுமார் தெரிவித்த முகவரியில் நாங்கள் ஏற்கனவே அவரது பெற்றோரை தேடிப்பார்த்தோம். ஆனால் கலியமூர்த்தி, தனலட்சுமி என்ற பெயரில் வேறுநபர்கள் தான் இருந்தனர். அவர்களது உண்மையான பெற்றோரை பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில் தான் அவரே தனது பெற்றோரை தேடும் முயற்சியில் தனியாக வந்துள்ளார். நாங்கள் மீண்டும் நாளை (அதாவது இன்று) தஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதிக்கு சென்று விசாரிக்க உள்ளோம். டேவிட் சாந்தகுமாருக்கு தனது பெற்றோரை காணும் ஆவல் அதிகமாக உள்ளது. தனது தாய்ப்பாச உணர்வை தேடி வந்துள்ளார். வருகிற 29-ந் தேதி மதியம் வரை தேடுவோம். அதன்பின் 29-ந் தேதி மதியத்திற்கு பின் அவர் டென்மார்க் புறப்பட்டு சென்றுவிடுவார்” என்றார். 

Next Story