வயிற்றில் கட்டி இருப்பதை சரியாக பரிசோதிக்காமல் பெண் கர்ப்பம் அடைந்ததாக கூறி அரசு டாக்டர்கள் சிகிச்சை


வயிற்றில் கட்டி இருப்பதை சரியாக பரிசோதிக்காமல் பெண் கர்ப்பம் அடைந்ததாக கூறி அரசு டாக்டர்கள் சிகிச்சை
x
தினத்தந்தி 24 Sep 2019 11:15 PM GMT (Updated: 24 Sep 2019 8:01 PM GMT)

பெண் வயிற்றில் கட்டி இருப்பதை சரியாக பரிசோதிக்காமல் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறி அரசு டாக்டர்கள் 6 மாதம் சிகிச்சை அளித்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அஸ்வினி (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அஸ்வினி கடந்த மார்ச் மாதம் கல்லாவியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். சோதனையில் அஸ்வினி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 6 மாதமாக அவர் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளான தடுப்பூசி போடுதல், மாதாந்திர பரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளும் பெற்று வந்துள்ளார்.

அஸ்வினி பெயரில் தனியாக தாய் மற்றும் சேய் நல காப்பகம் மூலம் அட்டை கொடுத்து அதில் வாரந்தோறும் சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி மாதாந்திர பரிசோதனைக்கு சென்றபோது அஸ்வினி வயிற்று வலி இருப்பதாக டாக்டரிடம் தெரிவித்தார். எனவே மருத்துவர் ஸ்கேன் செய்து வருமாறு கூறியுள்ளார்.

குழந்தை இல்லை

அதைத்தொடர்ந்து தர்ம புரியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தை ஏதும் இல்லை, நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது.

கர்ப்பம் அடையாத தகவல் அறிந்த அஸ்வினி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வேறொரு ஸ்கேன் எடுக்கும் மையத்திற்குச் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிலும் அஸ்வினி வயிற்றில் குழந்தை ஏதும் இல்லை, நீர்க்கட்டி தான் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்பிறகு அஸ்வினி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று கல்லாவி அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் கேட்டதற்கு தெரியாமல் நடந்து விட்டது என பதில் கூறியுள்ளனர்.

வாக்குவாதம்

இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு காணப்பட்டது. மேலும் அஸ்வினி வயிற்றிலுள்ள கட்டியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். கட்டி உள்ளது என்பது கூட தெரியாமல் கர்ப்பத்திற்கான சிகிச்சை அளித்ததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் மிகவும் வேதனையுடன் கூறி அஸ்வினி கதறி அழுதார். அரசு டாக்டர்களின் அலட்சியமே இதற்கு காரணம் எனக்கூறி மேலும் என்னைப்போன்ற பெண்கள் யாரும் இதுபோல் பாதிப்படைய கூடாது என்றார்.இந்த சம்பவம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கரிடம் கேட்ட போது, ‘இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story