கந்திகுப்பத்தில் பரிதாபம் குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


கந்திகுப்பத்தில் பரிதாபம் குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 24 Sep 2019 11:00 PM GMT (Updated: 24 Sep 2019 8:05 PM GMT)

கந்திகுப்பத்தில் குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சகாயநாதன். இவருடைய மகன் ஸ்டீபன் வெர்னே (வயது 11). இவன் ஒரப்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். சகாயநாதனின் தம்பி ஜெயபிரகாஷ். இவருடைய மகன்கள் சாரோன்ராஜ் (11), கெர்சோன்ராஜ் (6). இவர்கள் 2 பேரும் பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முறையே 6 மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் சிறுவர்கள் ஸ்டீபன் வெர்னே, சாரோன்ராஜ், கெர்சோன்ராஜ் ஆகிய 3 பேரும் விளையாட சென்றனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் கந்திகுப்பம்-எலசகிரி சாலையில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர்.

2 பேர் பலி

இந்த ஏரி சமீபத்தில் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது ஆகும். இந்த நிலையில் அந்த ஏரியில் சமீபத்தில் பெய்த மழைக்கு குட்டை போல் 12 அடி அளவுக்கு ஒரு இடத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த குட்டை அருகே சிறுவர்கள் 3 பேரும் விளையாடினார்கள். பின்னர் அவர்களில் ஸ்டீபன் வெர்னே, கெர்சோன்ராஜ் ஆகிய 2 பேரும் குளிப்பதற்காக அந்த குட்டையின் உள்ளே இறங்கினார்கள்.

அப்போது அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த சாரோன்ராஜ் அதிர்ச்சியில் அலறினான். அவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் குட்டையில் மூழ்கி இருந்த 2 சிறுவர்களையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் மூழ்கி பலியான 2 சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

உறவினர்கள் கதறல்

அவர்களின் உடல்களை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலியான சம்பவம் கந்திகுப்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story