விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் இல.கணேசன் பேட்டி


விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 25 Sept 2019 4:45 AM IST (Updated: 25 Sept 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என ராசிபுரத்தில் இல.கணேசன் கூறினார்.

ராசிபுரம்,

ராசிபுரத்தில் பா.ஜ.க. சார்பில் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சேதுராமன், கோட்ட பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் நகர தலைவர் மணிகண்டன் வரவேற்றார். பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் கலந்துகொண்டு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டர் ஜெகனாதன் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, தமிழரசியோகம், கோட்ட இணை பொறுப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் ஹரிகரன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், மாவட்ட துணைத்தலைவர் சித்ரா, மாவட்ட எஸ்.சி. அணி தலைவர் கதிரேசன், குருசாமிபாளையம் நாகேந்திரன், ராசிபுரம் நகர பிற்பட்டோர் அணி தலைவர் மணிகண்டன் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பிற்பட்டோர் அணி தலைவர் துரைராஜன் நன்றி கூறினார்.

100 நாள் சாதனை

முன்னதாக இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் 370 சட்டப்பிரிவை நீக்க பா.ஜ.க. உறுதி அளித்திருந்தது. மேலும் இது பல ஆண்டுதிட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டு ஜனநாயக ரீதியாக நீக்கப்பட்டு உள்ளது. 2-வது முறையாக பொறுப்பேற்று உள்ள பா.ஜ.க.வின் 100 நாள் சாதனைகளில் 370 பிரிவு நீக்கியதே முக்கிய சாதனையாகும்.

பிரதமர் நரேந்திர மோடி ஊழல் செய்யமாட்டேன் என சபதம் எடுத்ததோடு இல்லாமல் அதை நிருபித்து காட்டி உள்ளார். லஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்காக சில கட்டமைப்புகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக மின்னணு பரிவர்த்தனை காரணமாக லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் குறைந்து, அனைத்து திட்டங்களும் நேரடியாக பயனாளிகளை சென்றடைகிறது. பொருளாதார சீரமைப்புகளை நோக்கியே நிதி அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. வெற்றி பெறும்

இதற்கு முன்பு யாரெல்லாம் லஞ்சம் பெற்றார்களோ, அவர்கள் அனைவரையும் கோர்ட்டு முன்பு நிறுத்தும் பணியை பிரதமர் தொடங்கி இருக்கிறார். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்ளார். ஒரே நாடு, ஒரே அட்டை என்பது வரவேற்கத்தக்கது. விக்கிரவான்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். பா.ஜ.க. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு ஒத்துழைக்கும்.

அனைத்து நிலை தொழில் நிறுவனங்களையும் பா.ஜ.க. அரசு சமமாக கருதி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வரும். அதில் பா.ஜ.க. முழுவீச்சில் களம் இறங்கி வெற்றிபெறும். ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை ஒட்டுமொத்த பாரத தேசத்தின் பிரச்சினை. இந்த பிரச்சினை, நாடு சுதந்திரம் பெற்றது முதல் இருந்து வருகிறது. சிறிது காலத்தில் அது முழுமையாக சரி செய்யப்படும்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

Next Story