அன்னவாசல், காரையூர், கந்தர்வகோட்டை பகுதிகளில் பலத்த மழை வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி


அன்னவாசல், காரையூர், கந்தர்வகோட்டை பகுதிகளில் பலத்த மழை வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல், காரையூர், கந்தர்வகோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கிளிக்குடி கிராமத்தில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

அன்னவாசல்,

அன்னவாசல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குளங்களில் தண்ணீர் வற்றியதால், கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில், அன்னவாசல் பகுதிகளில் உள்ள இலுப்பூர், மேட்டுச்சாலை, வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், கிளிக்குடி, வயலோகம், குடுமியான்மலை, பெருமநாடு, குமரமலை, கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், மாங்குடி, ஆரியூர், பெருஞ்சுனை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது

இந்த மழையால் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர தொடங்கியுள்ளது. குளங்கள், குட்டைகள், கிணறுகளில் தண்ணீர் நிரம்ப தொடங்கியுள்ளது. தற்சமயம் பெய்த மழையால் அன்னவாசல் அருகே உள்ள பெருமநாடு முட்டுபாறை குளத்தில் சிறுவர்கள் துள்ளி குதித்து ஆனந்தமாய் குளித்து வருகின்றனர். அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி கிராமத்தில் சரியான வரத்து வாரி இல்லாததால், பெரிய கண்மாய்க்கு செல்லவேண்டிய தண்ணீர் ஊருக்குள் சென்று வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். எனவே கிளிக்குடி பெரிய கண்மாய்க்கு வரும் வாரிகளை தூர்வாரி, ஆக்கிரமிப்பை அகற்றி முறையாக கண்மாய்க்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய பணிகள் தீவிரம்

காரையூர் பகுதியான கீழத்தானியம், மேலத்தானியம், ஆலம்பட்டி, ஒலியமங்கலம், சடையம்பட்டி, எம்.உசிலம்பட்டி நல்லூர், அரசமலை, சூரப்பட்டி, கொன்னையம்பட்டி, சடையம்பட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் விவசாயிகளின் நீர் ஆதாரமாக குளத்தை மட்டுமே நம்பி அதிக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் கிணறு, ஆழ்குழாய் கிணறு இருப்பவர்கள் மட்டுமே விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் காரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் குளங்களில் பாதி அளவு நீர் நிரம்பி உள்ளது. இதனை நம்பி இப்பகுதிகளில் விவசாயிகள் தங்களது வயல்களில் நெல் நாற்று பயிரிடுவதற்கு உழவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாததால் வயல்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவு உருவாகி உள்ளது. அதனை விவசாயிகள் அப்புறப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டா பகுதியில் நேற்று முன்தினம் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய உள்ளது. இதையடுத்து விவசாயிகள் உழவு பணியில் ஈடுபட்டனர்.

இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

Next Story