நலவாரியங்களை பாதுகாக்கக்கோரி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா


நலவாரியங்களை பாதுகாக்கக்கோரி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

நலவாரியங்களை பாதுகாக்கக்கோரி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருச்சி,

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை திரும்பப்பெற கோரியும், கட்டுமான தொழிலாளர்களுக்கு நடைமுறையில் இருந்து வரும் பாதுகாப்பையும், பலன்களையும் தொடர்ந்து வழங்கி மேம்படுத்தக்கோரியும் நாடு தழுவிய அளவில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.

அதன்படி, திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். போராட்டத்தை போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி சுப்பிரமணி தொடங்கி வைத்தார். போராட்டத்தின்போது, கட்டுமான தொழிலாளர் மத்திய சட்டத்தையும் நல வாரியங்களையும் அழித்து ஒழிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள்.

ரூ.40 ஆயிரம் கோடி நலநிதி

தர்ணா போராட்டத்தை விளக்கி ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் சுரே‌‌ஷ் பேசினார். அவர் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் கட்டுமான தொழிலாளர் நலவாரியங்களில் உள்ள ரூ.40 ஆயிரம் கோடி நலநிதி இருப்பை மத்திய அரசு தனது நிதி தேவைகளுக்கு எடுத்து கொள்ள முடிவு செய்து விட்டது. அந்த பணத்தில் கட்டுமான தொழிலாளர்களின் இயற்கை மரண நிதி மற்றும் விபத்து மரண நிதியை தலா ரூ.10 லட்சமாக வழங்கலாம். திருமண உதவி தொகையாக ரூ.1 லட்சம் வரை கொடுக்கலாம். இப்படிப்பட்ட வாய்ப்புகள் இருக்கிற நிலையில் இந்த பணத்தை மத்திய அரசு சூறையாடுகிற நிலையை எதிர்த்துதான் தர்ணா நடக்கிறது. இந்த போராட்ட அறிவிப்புக்கு முன்னால், தமிழக அரசு சமீபத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு பயந்து பணத்தை திருப்பி அனுப்பி விடக்கூடாது. நலநிதியை அரசு பாதுகாக்க வில்லை என்றால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி நலவாரியங்களை பாதுகாக்கிற போராட்டத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.

போராட்டத்தில் கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முருகன், துரைராஜ், வீராசாமி, தனலெட்சுமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தையொட்டி நேற்று கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

Next Story