சுரங்கனார் நீர்வீழ்ச்சி அருகே, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
கூடலூர் அருகே சுரங்கனார் நீர்வீழ்ச்சி அருகே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சுரங்கனார் நீர்வீழ்ச்சி உள்ளது. மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த தண்ணீர் ஒட்டாண்குளம் என்றழைக்கப்படும் மைத்தலை மன்னடியான் குளத்தில் தேங்குகிறது. இதன் மூலம் ஒட்டாண்குளம், ஈஸ்வரன் கோவில் புலம், ஒழுகுவழிசாலை, பாரவந்தான் ஆகிய பகுதிகளில் சுமார் 406 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இரு போக நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த சுரங்கனார் நீர்வீழ்ச்சி அருகே கடந்த 2011-ம் ஆண்டு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்த மண், செடி, கொடிகள் மரங்கள் சரிந்துவிட்டது. இதனால் அருவியில் விழும் தண்ணீர் மறிக்கப்பட்டு முல்லைப்பெரியாறு அணைக்கு திசைமாறி செல்கிறது. இதனால் ஒட்டாண்குளம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர்.
இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட வன உதவி அலுவலர் மகேந்திரன், கம்பம் மேற்கு வனச்சரகர் அன்பு, உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்புசெல்வன், உதவி பொறியாளர்கள் கதிரேசகுமார், பிரேம்ராஜ்குமார், உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, துணை தாசில்தார் சுருளிநாதன், மேலக்கூடலூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று காலையில் சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதிக்கு வந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது நீர்வரத்து பாதிக்கப்பட்ட ஒட்டாண்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இது தொடர்பான ஆய்வறிக்கை கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கொடுக்கப்படும். அதன்பின்னர் இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்குவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதிகாரிகள் ஆய்வின்போது விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story