ஸ்ரீவைகுண்டம் அருகே 3 விவசாயிகளுக்கு அரிவாள் வெட்டு: - அண்ணன்-தம்பி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
ஸ்ரீவைகுண்டம் அருகே 3 விவசாயிகளை அரிவாளால் வெட்டிய அண்ணன்-தம்பி உள்ளிட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரைச் சேர்ந்தவர்கள் சங்கர நாராயணன் (வயது 50), ஆயிரம் (50), பூவலிங்கம் (38). விவசாயிகளான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவில் தங்களது ஊரில் மெயின் ரோடு கிருஷ்ணர் சிலை அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 மர்மநபர்கள் அரிவாளால் சங்கர நாராயணன், ஆயிரம், பூவலிங்கம் ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டி விட்டு, தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக பக்கத்து ஊரான இலுப்பைகுளத்தைச் சேர்ந்த பூல்பாண்டி மகன்களான ராமசாமி, கொம்பையா உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சங்கரநாராயணன் உள்ளிட்ட 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான ராமசாமி உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து ராமானுஜம்புதூர், இலுப்பைகுளம் பகுதியில் பதற்றம் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story