நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கோரிக்கை


நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2019 11:00 PM GMT (Updated: 25 Sep 2019 4:34 PM GMT)

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்ககோரி நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

நாகர்கோவில்,

அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைக்கும் விதத்திலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்ககோரி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. மாநகராட்சி நிர்வாகத்துடன், ஒரு தனியார் கல்லூரி இணைந்து நடத்திய இந்த பேரணியில் மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். பேரணியை நகர்நல அதிகாரி கின்ஷால் தொடங்கி வைத்தார்.

பேரணியானது நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்றது. பேரணியாக சென்ற மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். அதில் “தூக்கி செல்லும் பாலித்தீன் பைகள் தேசத்தின் தூக்கு கயிறுகள், குடி குடியை கெடுக்கும் பிளாஸ்டிக் எல்லாவற்றையும் கெடுக்கும்“ என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

நிலவேம்பு கசாயம்

முன்னதாக டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story