மு.க.ஸ்டாலின் குழப்பத்தில் இருக்கிறார் தஞ்சையில், வானதி சீனிவாசன் பேட்டி


மு.க.ஸ்டாலின் குழப்பத்தில் இருக்கிறார் தஞ்சையில், வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 26 Sept 2019 4:45 AM IST (Updated: 26 Sept 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் குழப்பத்தில் இருக்கிறார் என தஞ்சையில், வானதி சீனிவாசன் கூறினார்.

தஞ்சாவூர்,

தேச ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஜம்மு-காஷ்மீர் நேற்றும், இன்றும் என்ற தலைப்பில் தஞ்சையில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு டாக்டர் சாரதா தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவ வீரர் முரளி முன்னிலை வகித்தார். இதில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், மாவட்ட தலைவர் இளங்கோ, செயலாளர் ஜெய்சதீஷ், பொதுச் செயலாளர் உமாபதி உள்பட பலர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மு.க.ஸ்டாலின் மகன் என்பதை தாண்டி அந்த பதவிக்கு அவர் வருவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கிறது என்பதை அந்த கட்சியின் தலைவர் விளக்கினால் நன்றாக இருக்கும். இளைய வயதில் இருந்து அந்த கட்சிக்காக தியாகம் செய்தவர்கள், இளைஞரணியில் உழைத்து கொண்டு இருப்பவர்கள் எல்லாம் 2-ம் நிலை, 3-ம் நிலையில் தான் இருக்க வேண்டும். ஆனால் முதல்நிலை என்பது எங்கள் குடும்பத்திற்கு தான் சொந்தம் என்பதை அவரது நியமனம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத செயலை செய்துவிட்டு இன்று ஜனநாயகத்தை காப்பாற்றுகிறேன் என்று டெல்லியில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். மக்கள் அவரது முகத்திரையை கிழித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்

ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்த்து போராட்டம் என்ற மு.க.ஸ்டாலின், பின்னர் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம் என்றார். சமீபத்தில் அவர், இந்திமொழி திணிப்புக்கு எதிரான போராட்டம் என்று அறிவித்தார். உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்தை திரித்து கூறி முதலில் போராட்டத்தை அறிவித்து, பிறகு நாங்கள் விளக்கத்தை புரிந்து கொண்டோம். அதனால் போராட்டம் வாபஸ் என்றார்.இதற்கு முன்பு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்று அறிவித்தார். கடந்த காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கும், அதற்கு பிறகு அவர் பின்வாங்குவதை பார்த்து மு.க.ஸ்டாலின் தீவிர குழப்பத்தில் இருக்கிறார் என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story