வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணி குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசும்போது கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணியை முன்னிட்டு, முன்சுருக்கத்திருத்தப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த மறுசீரமைக்கும் பணியின் போது கிராமப்புற, நகர்புற வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகபட்சமாக 1,500 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்ததெந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500-க்கு மேல் உள்ளதோ அவை இரண்டாக பிரிக்கப்படுகிறது. மேலும் 2 கிலோமீட்டருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைத்தல், பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் பெயர் மாற்றம், கட்டிடம் பழுது ஏற்பட்டதன் காரணமாக மாற்று கட்டிடம் ஏற்படுத்துதல் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இக்கூட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இருந்து வரப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தேர்தல் பிரிவு தாசில்தார் ஆர்த்தி மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story