பெரும்பாறை அருகே, வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல் - தொழிலாளி கைது
பெரும்பாறை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி, வெடிமருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பெரும்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையை அடுத்த பாச்சலூர் அருகே சோளியபாறை என்னும் மலைக்கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு தோட்டத்து வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டுக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்து ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதனையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி வேல்முருகன் (வயது 40) என்று தெரியவந்தது. கடந்த 18 வருடங்களாக இவர், பாச்சலூர் சோளியபாறையில் உள்ள தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து, லைட், சார்ஜர் ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியதாக வேல்முருகன் தெரிவித்தார்.
மேலும் ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு பகுதியை சேர்ந்த குமார், கண்ணன் ஆகியோரிடம் இருந்து துப்பாக்கியை விலைக்கு வாங்கியதாகவும் அவர் கூறினார். தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story