வீடு கட்டி தருவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபர் கைது
வீடு கட்டி தருவதாக கூறி 71 பேரிடம் ரூ.10 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை காந்திவிலியை சேர்ந்தவர் சதீஷ். கட்டுமான அதிபரான இவர், காஞ்சூர்மார்க் பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்ட இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு விளம்பரம் செய்து இருந்தார். மேலும் அந்த கட்டிடத்தில் ஒரு வீடு ரூ.54 லட்சம் எனவும், 2020-ம் ஆண்டு கட்டிடம் கட்டி முடிக்கப்படும் எனவும் விளம்பரத்தில் கூறியிருந்தார்.
இந்த விளம்பரத்தை பார்த்த பலர் அவரது அலுவலகத்திற்கு சென்று பணத்தை கொடுத்து வீட்டை முன்பதிவு செய்தனர். ஆனால் அவர் சொன்னது போல கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலே இருந்தது.
இதையடுத்து வீட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் அதை திருப்பி கேட்டனர். ஆனால் சதீஷ் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், 71 பேரிடம் வீடு கட்டி தருவதாக கூறி சதீஷ் ரூ.10 கோடி அளவில் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனால் போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.
இதுபற்றி அறிந்த சதீஷ் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கட்டுமான அதிபர் சதீசை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story