கிருஷ்ணகிரியில், கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவியுடன் லாரி டிரைவர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது


கிருஷ்ணகிரியில், கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவியுடன் லாரி டிரைவர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 25 Sep 2019 11:00 PM GMT (Updated: 25 Sep 2019 8:14 PM GMT)

கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவியுடன், லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 38). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி என்கிற ஜெரினா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. தற்போது ஜெரினா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றனர். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டி பார்த்தனர். அப்போது குமரனும், ஜெரினாவும் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு பிணமாக தொங்கிய குமரன், ஜெரினாவின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தற்கொலை செய்து கொண்ட அறையில் ஜெரினா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.

அந்த கடிதத்தில், ‘நாங்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளோம். அந்த கடனை எங்களால் திருப்பி கட்ட முடியவில்லை. இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. உறவினர்கள் யாராவது எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்து கடன்களை அடைக்குமாறு தெரிவித்து கொள்கிறேன்’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கணவன், மனைவி இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் கர்ப்பிணி மனைவியுடன், லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story