காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்ய நாராயணசாமி- நமச்சிவாயம் டெல்லியில் முகாம்


காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்ய நாராயணசாமி- நமச்சிவாயம் டெல்லியில் முகாம்
x
தினத்தந்தி 25 Sep 2019 11:45 PM GMT (Updated: 25 Sep 2019 8:16 PM GMT)

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை ரெட்டியாரின் மகன் ஜெயக்குமார் ஆகியோர் உள்பட 11 பேர் விருப்பமனு கொடுத்தனர். அவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது.

இருந்தபோதிலும் ஜான்குமார், ஜெயக்குமார் இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஜான்குமாருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமியும், ஜெயக்குமாருக்கு ஆதரவாக அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயமும் களம் இறங்கியுள்ளனர்.

இந்தநிலையில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விதமாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்கள்.

அப்போது வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அதன்பின் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் வேட்பாளர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 30-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

Next Story