கறம்பவிடுதி பெரிய குளத்தில் வரத்துவாரி அடைப்பை சீரமைத்த விவசாயி பொதுமக்கள் பாராட்டு


கறம்பவிடுதி பெரிய குளத்தில் வரத்துவாரி அடைப்பை சீரமைத்த விவசாயி பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 25 Sep 2019 10:30 PM GMT (Updated: 25 Sep 2019 8:26 PM GMT)

உரிய நேரத்தில் யாரையும், எதிர்பார்க்காமல் தனி ஆளாக வரத்து வாரி அடைப்பை சரிசெய்து குளத்தில் தண்ணீர் பெருக காரணமாக இருந்த விவசாயி ரமேஷக்கு அப்பகுதி பொதுமக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பொதுப்பணி துறைக்கு சொந்தமான பெரிய குளம் உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கறம்பக்குடி பகுதியில் போதிய மழை பெய்யாததால் இக்குளத்தில் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கறம்பக்குடி பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளங்களில் தண்ணீர் வர தொடங்கியுள்ளன. இருப்பினும் கறம்பவிடுதி, பெரியகுளத்திற்கு தண்ணீர் சரிவர வரவில்லை. நேற்று முன்தினம் மாலையில், கனமழை பெய்தது. அப்போது வயல் வெளியில் நின்று கொண்டிருந்த விவசாயி ரமேஷ் (வயது 45) பெரியகுளத்தின் வரத்து வாரியில் தண்ணீர் வராததை அறிந்து வரத்து வாரி பாதையில் நடந்து சென்றார். அப்போது சாலையின் குறுக்கே இருந்த வரத்து வாரி குழாய் பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் மழைநீர் மாற்று பகுதியில் சென்று வீணாகி கொண்டிருந்தது.

இதையடுத்து மழைபெய்து கொண்டிருந்தபோது தனி ஆளாக செயலில் இறங்கி ரமேஷ் வரத்துவாரி மற்றும் பாலத்தின் குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை முழுமையாக அகற்றினார். இதைதொடர்ந்து குளத்தின் வரத்த வாரியில் மழைநீர், ஏரி குளத்திற்கு சென்றது. இரவில் மழைபெய்ததால் தற்போது கறம்பவிடுதி பெரியகுளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. உரிய நேரத்தில் யாரையும், எதிர்பார்க்காமல் தனி ஆளாக வரத்து வாரி அடைப்பை சரிசெய்து குளத்தில் தண்ணீர் பெருக காரணமாக இருந்த விவசாயி ரமேஷக்கு அப்பகுதி பொதுமக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்த குளம் முழுமையாக நிரம்பினால் அப் பகுதியில் 2 போகம் விளைச்சல் தடையின்றி இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

Next Story