அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது


அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது
x
தினத்தந்தி 25 Sep 2019 11:00 PM GMT (Updated: 25 Sep 2019 8:51 PM GMT)

திருச்சி மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 16 மையங்களில் தொடங்கி நடந்து வருகிறது.

திருச்சி,

மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செய்தது. அப்போது 412 பயிற்சி மையங்களில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடந்தன. கடந்த ஆண்டிலும்(2018) இந்த பயிற்சி வகுப்புகள் நடந்தன. கடந்த ஆண்டில் 19,355 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர்.

இந்தநிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2019-20) ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் காலாண்டு தேர்வு முடிந்த பின்னரும் தொடங்கப்படவில்லை என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்து வந்தனர். அதன்பலனாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

16 மையங்களில் பயிற்சி

தமிழிலும், ஆங்கிலத்திலும் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் சென்னையில் மட்டும் 10 இடங்களில் நடக்கிறது. ‘நீட்’ தேர்வுக்கு மட்டுமல்லாது ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டி தேர்வுக்கும் தயாராகும் வகையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சுமார் 13 ஆயிரத்திற்கும் மேலான மாணவ-மாணவிகள் பங்கேற்று இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் பி‌‌ஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, அயிலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளி, தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 16 பயிற்சி மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இந்த 16 பயிற்சி மையங்களிலும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 39 பேர், 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 151 பேர் என 190 பேர் ‘நீட்’ தேர்வு பயிற்சியும், 3 மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு பயிற்சியும் பெறுகிறார்கள்.

கூடுதல் மையங்கள்

காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வருகிற 28-ந் தேதி வரை வகுப்புகள் நடைபெறுகிறது. அதன்பிறகு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ‘ஈடூஸ் இந்தியா’ என்ற நிறுவனம் மூலம் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்நிறுவனம் 320 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு முறையாக சொல்லி கொடுத்து, இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது.

இந்த ஆண்டு முதல் கூடுதலாக 94 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தநிலையில், தற்போது வரை பழைய நிலையிலேயே 412 மையங்களில்தான் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. கூடுதலாக அறிவிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் விரைவில் வகுப்புகள் தொடங்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Next Story