சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு தேசியவாத காங்கிரசார் போராட்டம்


சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு தேசியவாத காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2019 5:30 AM IST (Updated: 26 Sept 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மராட்டியத்தில் அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை, 

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதை கண்டித்து நேற்று மும்பை, தானே உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு மாநில இளைஞர் அணி தலைவர் மெகபூப் சேக் தலைமையில், தேசியவாத காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பா.ஜனதா அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியினரை எம்.ஆர்.ஏ. மார்க் போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மெகபூப் சேக் கூறுகையில், ‘‘தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளதால் சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் குரலை ஒடுக்க, அமலாக்கத்துறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை கண்டித்து அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்றார்.

Next Story