கோவில்பட்டியில் பரபரப்பு, பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு - போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது சம்பவம்


கோவில்பட்டியில் பரபரப்பு, பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு - போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது சம்பவம்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் மாணிக்கராஜா (வயது 39). பிரபல ரவுடியான இவர் மீது கோவில்பட்டி கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி, கொள்ளை உள்ளிட்ட 56 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி பிள்ளையார்நத்தம் காட்டுப்பகுதியில் அனுமதியின்றி தனியார் இடத்தில் போலி பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார். இதையடுத்து மாணிக்கராஜாவை கைது செய்த போலீசார், அங்கிருந்த போலி பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மாணிக்கராஜா, கோவில்பட்டி குருமலை கார்த்திகைபட்டியில் உள்ள தனது தோட்டத்தில் துப்பாக்கிகள், ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மாலையில் கோவில்பட்டி கிழக்கு தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையில், போலீஸ்காரர்கள் செல்வகுமார் (27), முகம்மது மைதீன் (28), அருண்குமார், செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், மாணிக்கராஜாவின் தோட்டத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தோட்டத்தில் பதுங்கி இருந்த மாணிக்கராஜா திடீரென்று அரிவாளால் போலீசாரை வெட்டி விட்டு, தப்பியோட முயன்றார். இதில் போலீஸ்காரர்கள் செல்வகுமார், முகம்மது மைதீன் ஆகியோருக்கு கைகளில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தனது துப்பாக்கியால் மாணிக்கராஜாவின் வலது காலில் சுட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பலத்த காயம் அடைந்த மாணிக்கராஜா ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து மாணிக்கராஜாவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த போலீஸ்காரர்கள் செல்வகுமார், முகம்மது மைதீன் ஆகிய 2 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மாணிக்கராஜா ஆம்புலன்ஸ் மூலம் இரவு 8.45 மணியளவில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குண்டு காயம் அடைந்த மாணிக்கராஜா கூறுகையில், நான் கோவில்பட்டி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது, என்னை போலீசார் பிடித்து வேனில் ஏற்றினர். கார்த்திகைபட்டியில் உள்ள எனது தோட்டத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு எனது கண்களை கட்டி கீழே இறக்கிவிட்டனர். தொடர்ந்து போலீசார் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் எனது காலில் குண்டு பாய்ந்தது. எனது உயிருக்கு போலீசாரால் ஆபத்து இருக்கிறது. என் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து உள்ளனர். எந்த வழக்கிலும் நான் தண்டனை பெற்றது இல்லை. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றார்.

கோவில்பட்டியில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story